மம்தா நடத்திய மாநாடு பாஜக ஆட்சியை தூக்கி எறியும் மாநாடு- வைகோ பேட்டி

 மம்தா நடத்திய மாநாடு பாஜக ஆட்சியை தூக்கி எறியும் மாநாடு- வைகோ பேட்டி

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:- பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. டெல்டா மாவட்டங்களை அழித்து பாலைவனமாக்க மோடி முயற்சி செய்கிறார்.

கஜா புயலால் அழிந்து போன தமிழகத்துக்கு ஒரு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. அவர் தமிழகத்துக்கு வர தார்மீக உரிமை இல்லை. தமிழகத்துக்கு வரும் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவோம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாநில கட்சிகளுடன் இணைந்து வெற்றி பெற வேண்டும்.

அந்த கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டும். கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி கூட்டிய மாநாடு பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறியும் மாநாடாக அமைந்து இருக்கிறது. அங்கு பேசிய தலைவர்கள் ஒரே குரலில் பேசி இருக்கிறார்கள். தி.முக. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் குரலாகவும், திராவிட இயக்கத்தின் குரலாகவும் பேசி இருக்கிறார். அவர் இரண்டாம் சுதந்திர போர் என பிரகடனப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. வருகிற பாராளுமன்ற தேர்தல் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

20 தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடந்தால் அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்படும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்த வரையில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது. இந்த ஆலை நிர்வாகத்துடன் அ.தி.மு.க. அரசு ரகசிய தொடர்பு வைத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Share It