
சென்னை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு, நீதிமன்றமே, குழு அமைக்கும் என்று, மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தை முதல் நாளில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அரசு அறிவித்தது. இதனிடையே, ஜல்லிக்கட்டு விழா குழு அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அனைத்து சமூகத்தினரையும் சேர்ந்த குழுவை அமைத்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். ஒரே ஜாதி ஆதிக்கம் இருக்க கூடாது என 14 வழக்குகள் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் இணைக்கப்பட்டு, நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. ஜாதி பிரச்சினையை வைத்து ஜல்லிக்கட்டுக்கு பிரச்சினை ஏற்படகூடாது. எனவே நீதிமன்றமே விழா கமிட்டியை அமைக்கும். ஜல்லிக்கட்டுக்கு முழுமையாக பாதுகாப்பு வழங்குவது குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட எஸ்.பி. மதுரை போலீஸ் கமிஷனர், இன்னும் அரை மணி நேரத்தில் ஆஜராக வேண்டும் என்று அப்போது நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்தனர்.
சுமூகமாக ஜல்லிக்கட்டு நடத்த முன்வராவிட்டால், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். இதன்பிறகு மீண்டும் நீதிமன்றம் கூடியபோது, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கான குழுவை நீதிமன்றமே அமைக்கும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதை மனுதாரர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.