நவீன கக்கன் “நல்லகண்ணு”

 நவீன கக்கன் “நல்லகண்ணு”

சென்னை: அரசியல்வாதிகளிலேயே தன் எளிமையால் அனைத்து தரப்பு மக்களாலும் நேசிக்கப்படுபவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு மட்டுமே என்பதை உரக்க சொல்லலாம். எதிரிகளையே இதுவரை சம்பாதிக்காத ஒரே அரசியல் கட்சி தலைவர் இந்த “நவீன கக்கன் நல்லகண்ணு” மட்டும்தான். அவரை பற்றி பல விஷயங்களை மக்கள் அறிந்தவைதான்

நல்லகண்ணுவின் அப்பா பெயர் ராமசாமி. இவர் ஒரு தீவிரமான வைணவ பக்தர். அதனால் எப்பவுமே நான்-வெஜ் சாப்பிட மாட்டார். அதனால் தன் மகனையும் அசைவம் சாப்பிட பழக்கவே இல்லை. இப்படிதான் பள்ளி, கல்லூரிகளில் வளர்ந்தார் நல்லகண்ணு.

அசைவம் சாப்பிட்டார்
ஆனால் இயக்க ரீதியான போராட்டங்களின்போது, தலைமறைவு வாழ்வு வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 1948, 49-ம் ஆண்டுகளில் பதுங்கி, மறைந்து வாழும் காலங்களில் எந்த வீட்டில் யார் என்ன கொடுத்தாலும் அதை வாங்கி சாப்பிட வேண்டிய நிலை அவருக்கு வந்தது. அப்படிதான் அசைவமும் அவருக்கு பல சமயம் உணவாக வந்து சேர்ந்தது. அப்போதிருந்துதான் அசைவம் சாப்பிட ஆரம்பித்தார். இதில் இவருக்கு எப்பவுமே பிடித்தமாக இருந்தது மீன்தான்!!

கடலை மிட்டாய்
நல்லகண்ணுவுக்கு ரொம்பவும் பிடித்த உணவு எது என்றால் கடலை மிட்டாய்தான். எப்பவுமே தன் இடுப்பு வேட்டிக்குள் கடலை மிட்டாயை சுருட்டி வைத்திருப்பார். தன்னை நேரில் சந்திக்க யார் வந்தாலும் சரி, எவ்வளவு பெரிய அரசியல் தலைவர்கள் வந்தாலும் சரி, அவர்களுக்கு பக்கத்தில் உள்ள டப்பாவில் இருந்து எடுத்து கடலை மிட்டாயை தந்து சாப்பிட சொல்வார்.

டிஸ்மிஸ் செய்யப்பட்டார்
ஸ்ரீவைகுண்டம் கேசிஎஸ் பள்ளியில் படித்தபோது, அங்குள்ள மாணவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக நாடகம் போட்டார்கள். இதனை பார்த்து கோபப்பட்ட நல்லகண்ணு, தன்னுடன் சில நண்பர்களை சேர்த்து கொண்டு அதற்கு எதிராக நாடகம் போடவே பள்ளியை விட்டு நீக்கப்பட்டார். பிறகு வேறு பள்ளியில் படித்து நெல்லை இந்து கல்லூரியில் சேர்ந்தார். அங்கு வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு எதிராக குரல் கொடுக்கவும் அங்கிருந்தும் நீக்கப்பட்டார். அப்போது நல்லகண்ணு வயது 22!

நெல் மூட்டைகள்
1943-ம் வருடம்!!! தன் எழுதிய ஒத்த கட்டுரையாலேயே பல மாற்றங்களை நடத்தி காட்டியவர் நல்லகண்ணு. படித்து முடித்ததும் ஜனசக்தி என்ற பத்திரிகையில் வேலை பார்த்தார். அப்போது நெல்லையில் நில பண்ணையார்கள் 2000 நெல்மூட்டைகளை பதுக்கி வைத்திருந்தார்கள் என்ற விவரம் இவரது காதுக்கு எட்டியது. உடனே அதை கட்டுரையாக எழுதி வெளியிட்டார். இதை படித்த மாவட்ட கலெக்டர், 2000 நெல்மூட்டைகளையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தார். இது பெரிதும் பேசப்பட்டு நல்லகண்ணு பெயரை பலரும் உச்சரிகக் தொடங்கினர். இதற்கு பிறகுதான் நல்லகண்ணு பொதுவாழ்க்கையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி கொள்ள ஆரம்பித்தார். அதில் முக்கியமாக கையில் எடுத்தது விவசாயிகளின் பிரச்சனையைதான்.

கார் தந்தார்கள்
அவரது 80-வது பிறந்த நாளுக்கு ஒரு காரும், 1 கோடி ரூபாயும் வசூல் செய்து கட்சி சார்பாக அளிக்கப்பட்டது. ஆனால் அந்த இரண்டையுமே கட்சிக்கே கொடுத்துவிட்டார். அதேபோல அம்பேத்கர் விருது அளிக்கப்பட்டு 1 லட்சம் ரூபாய் தரப்பட்டது. அதை இரண்டாக பிரித்து, கட்சிக்கு 50 ஆயிரம், விவசாய சங்கத்துக்கு 50 ஆயிரம் தந்துவிட்டார். (இன்றுவரை அவருக்கென்று ஒரு கார் இல்லை)

இழப்பீடு-படிப்பு
பலமுறை ஜெயிலுக்கு போன சிறைவாசி என்பதால் யாருமே இவருக்கு பெண் தர முன்வரவில்லை. அப்போது சாதிஒழிப்பு போராளி ஒருவர் மட்டும் தன் மகளை பெண் கொடுக்க முன்வந்தார். அந்த பெண்தான் ரஞ்சிதம் அம்மாள். சாதி ஒழிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது பலர் கொல்லப்பட்டனர். அதில் நல்லகண்ணுவின் மாமனாரும் ஒருவர். இதனால் அரசு அவரது மறைவிற்கு இழப்பீடு பணம் தந்தது. ஆனால் நல்லகண்ணு அந்த பணத்தை, அதே போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சார்ந்த 2 குழந்தைகளின் படிப்புக்காகவே தந்துவீட்டார்

மீசை ரகசியம்
பொதுவாழ்வில் 7 வருடம் சிறை தண்டனையை அனுபவித்தவர். அப்போது ஜெயிலில் நல்லகண்ணுவை தலைகீழாக தொங்கவிட்டு வேடிக்கை பார்த்தார்கள். மேலும் அவரது மீசையை கையாலேயே பிடுங்கி பிடுங்கி எடுத்தார்கள் சிறைகாவலர்கள். அந்த சித்ரவதையை சொல்லி மாளாது. இதன்காரணமாகவே நல்லகண்ணுக்கு கடைசிவரை மீசையே முளைக்கவில்லை.

நிழல்கூட ஒழுக்கமானது
நல்லகண்ணு மிகச்சிறந்த மனிதர்.. எளிமை விரும்பி… இறுதிவரை தன் இயக்கத்தின் கொள்கைப் பிடிப்புக்காகவே வாழ்ந்து வருபவர்… இதுவரை எந்த எதிரிகளையும் சம்பாதிக்காத மென்மை போக்கை உடையவர்.. இதுவரை எந்த விமர்சனங்களுக்கும் ஆளாகாதவர்… நல்லகண்ணுவின் நிழல் கூட ஒழுக்கமானதே!! இது நாடறிந்த உண்மை!!

Share It