அடுத்த சச்சின்! அடுத்த சேவாக்! பாராட்டு மழை… யார் இந்த பிரித்வி ஷா?

 அடுத்த சச்சின்! அடுத்த சேவாக்! பாராட்டு மழை… யார் இந்த பிரித்வி ஷா?

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பிரித்வி ஷா இந்திய அணியில் இடம்பெற்றார். ஆனால் விளையாடும் 11 பேரில் ஒரு போட்டியில்கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது நடைபெறும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் 11 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றார். தனது முதல் போட்டியில் சதம் அடித்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இதன் மூலம் அறிமுகப்படுத்திய முதல் போட்டியில் சதம் அடித்த இளம் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

மகாராஷ்டிராவில் 1999-ல் பிறந்தார் பிரித்வி ஷா. 4 வயது இருக்கும் போது அவரது தாயார் இறந்து விட்டார். அவரது தந்தை பிரித்வி ஷாவின் கிரிக்கெட் வாழ்க்கையில் கவனம் செலுத்த மிகவும் உதவினார். பிரித்வி ஷா மற்றும் அவரது தந்தையின் ஒரே நோக்கம் இந்திய அணியின் கிரிக்கெட் தொப்பியை ஷா அணிய வேண்டும் என்பதுதான். ஷாவும் அவரது தந்தையும் வாழ்க்கையில் அனைத்து நாட்களையும் கிரிக்கெட்டிற்காக அர்ப்பணித்தனர். 2010-ஆம் ஆண்டு ஏஏபி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றை தந்து ஷாவை கிரிக்கெட் பயிற்சியை தொடர அனுமதியளித்தது. இந்தியன் ஆயில் நிறுவனமும் இவருக்கு ஸ்பான்சர்ஷிப் அளித்தது.

பிரித்வி ஷா 2016-17 ரஞ்சி டிராபி அரை இறுதி போட்டி மூலம் தனது முதல் வகுப்பு ஆட்டத்தில் அறிமுகமானார். அந்த போட்டியில் மும்பை அணிக்கு விளையாடி இரண்டாவது இன்னிங்ஸில் தனது முதல் சதத்தை பதிவு செய்து ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். இதன் மூலம் இளம் வயதில் ரஞ்சி டிராபி தொடரில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். அடுத்ததாக துலீப் டிராபி முதல் போட்டியிலும் சதம் அடித்தார். ரஞ்சி டிராபி, துலீப் டிராபி மற்றும் சர்வதேச டெஸ்ட் போட்டி என மூன்றிலும் அறிமுக போட்டிகளில் சதமடித்து அசத்தி வருகிறார்.

2018-ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையில் பிரித்வி ஷா இந்திய அணியின் கேப்டனாகவும், சிறந்த பேட்ஸ்மேனாகவும் இந்திய அணியை வழி நடத்தி அணிக்கு கோப்பையை பெற்று தந்தார். கடந்த ஐபிஎல் தொடரில் பிரித்வி ஷா 1.2 கோடிக்கு டெல்லி அணியால் ஏலத்தில் எடுக்கபட்டார். ஐபிஎல்-ல் விளையாடிய மிக இளம் வீரர் என்ற பெருமைக்கு உரியவர். கொல்கத்தா அணிக்கு எதிராக ஐபிஎல் போட்டியில் அரை சதம் அடித்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அரை சதம் அடித்த இளம் வீரர் என்ற சஞ்சு சாம்சன் சாதனையை சமன் செய்தார். முதல் வகுப்பு போட்டிகளில் 14 ஆட்டங்களில் விளையாடி 7 சதங்கள் உட்பட 1418 ரன்கள் எடுத்துள்ளார். முதல் வகுப்பு போட்டிகளில் அவரின் பேட்டிங் சராசரி 56.72.

பிரித்வி ஷா மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் அவரது ஆட்டத்தை பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அடுத்த சேவாக், அடுத்த சச்சின் என பலரும் கூறிவருகின்றனர். சுரேஷ் ரெய்னா பிரித்வி ஷாவை அடுத்த சேவாக் என்று புகழ்ந்துள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய அணிக்கு மற்றுமொரு சூப்பர் ஸ்டார் கிடைத்துள்ளதாக ட்வீட்டரில் கூறியிருந்தார். சச்சின் மற்றும் லாராவின் கலவை தான் பிரித்வி ஷா என வாகன் ட்வீட்க்கு ரீட்வீட் செய்துள்ளார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஜாம்பவான் பேட்ஸ்மேன் மார்க் வாக்.

சேவாக் போன்று தயங்காமல் பந்தை எதிர்கொள்ளும் திறனும், சச்சின் போன்று பந்தை திசைக்கு ஏற்ப ஆடும் திறனும் பிரித்வி ஷாவிற்கு இருக்கிறது என முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கங்குலி கூறியுள்ளார். ஆனால் பிரித்வி ஷாவை சேவாக் உடன் ஒப்பிட வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளார் கங்குலி.

Share It