பிரிட்டிஷாரை ஓடவிட்ட இளைஞன்.. கொரில்லா படையை வைத்து செய்த சூர சாகசம்.. யார் இந்த பிர்ஸா முண்டா!

 பிரிட்டிஷாரை ஓடவிட்ட இளைஞன்.. கொரில்லா படையை வைத்து செய்த சூர சாகசம்.. யார் இந்த பிர்ஸா முண்டா!

சென்னை: தமிழகம் முழுக்க தற்போது பிர்ஸா முண்டா பெரிய அளவில் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளார். இவரின் வரலாறு மெய்சிலிர்க்க வைக்க கூடிய ஒன்று.

இயக்குனர் பா.ரஞ்சித், பிர்ஸா முண்டாவின் வாழ்க்கையை படமாக எடுக்க போகிறார் என்று செய்தி வந்ததும் யார் இவர், யார் இவர் என்று எல்லோரும் தேட தொடங்கிவிட்டார்கள். அப்படி இணையத்தில் தேடிய பலருக்கு நிறைய கதைகள், நிறைய விவரங்கள் கிடைத்து இருக்கும்.

இந்த ஆதிவாசி புரட்சியாளனுக்கு பின் நிறைய சாகச வரலாறும், சோக கதையும் இருக்கிறது. 24 வயதில் இறந்து போன இவரின் மரணம் கூட இப்போது வரை சர்ச்சையாகத்தான் இருக்கிறது.

எங்கு பிறந்தார்
நவம்பர் 15ம் தேதிதான் பா. ரஞ்சித் இந்த படத்தை இயக்க போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதே நாளில்தான் பிர்ஸா முண்டா 1875ல் பிறந்தார். குந்தி மாவட்டத்தில், தற்போது இருக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு அருகில் உலிஹாட்டு என்று கிராமத்தில் பிறந்தார் இவர். முண்டா என்ற ஆதிவாசி இனத்தை சேர்ந்தவர். அதே பகுதியில் நிறைய வேறு ஆதிவாசி குழுக்களும் இருந்தது.

மாற்றம்
ஆதிவாசி குழுவில் பிறந்த இவருக்கு தொடக்கத்தில் இருந்தே பெரிய அளவில் படிக்க வேண்டும் என்று ஆசை. இவர்களின் இனக்குழு பல்வேறு அரசியல் காரணங்களால் தொடர்ந்து இடம் மாறி இடம் மாறி கடைசியாக அதே மாநிலத்தில் உள்ள சால்கட் என்று காட்டுப்பகுதியில் குடியேறியது. அங்குதான் அவர் அதிக வருடம் வசித்தது.

கிறிஸ்துவம் எப்படி?
இவரின் ஆசிரியர் ஜெய்பால் நாக்கின் அறிவுரையின் பேரில் இவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார். பிர்ஸா முண்டா ஆசைப்பட்டபடி அப்போதுதான் படிக்க முடியும் என்று இவர் மதம் மாறினார். அதன்பின் ஜெர்மன் மிஷன் பள்ளியில் சேர்ந்து படிக்கவும் தொடங்கினார். ஆனால் இந்த மத மாற்ற விஷயம் இவருக்கு பெரிய உறுத்தலாகவே இருந்தது.

மதங்களை உணர்ந்தார்
இவர் அந்த ஜெர்மன் பள்ளியில் படிக்க படிக்க, ஆங்கிலேயர்கள் மக்களை எப்படி எல்லாம் அடிமை படுத்துகிறார்கள் என்று தெரிந்து கொண்டார். இதில் மத மாற்றமும், நில உரிமையும் எப்படி எல்லாம் பெரிய பிரச்சனை செய்கிறது என்று தெரிந்து கொண்டார். இதனால் அந்த பள்ளியைவிட்டு வெளியேறினார். அதோடு கிறிஸ்துவ மதத்தை விட்டு வெளியேறுவதாகவும் அறிவித்தார்.

தனி இனக்குழு
இதையடுத்து ஆதிவாசி மக்களை உள்ளடக்கிய பிர்சாய்த் என்ற இனக்குழுவை உருவாக்கினார். இதில் பல ஆதிவாசி மக்கள் வந்து இணைந்தனர். கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய பலர், அந்த மதத்தைவிட்டுவிட்டு இதற்கு மாறினார்கள். இதுதான் முதல் முதலாக ஆங்கிலேயர்களுக்கு பெரிய அளவில் அதிர்ச்சியை அளித்தது. பிர்ஸா முண்டா அப்போதுதான் குறிவைக்கப்பட்டார்.

சர்தார் படை
ஆனால் மதம் மட்டுமே இவரின் போராட்டம் கிடையாது. தன்னை சுற்றி நடக்கும் அரசியல் மாற்றங்களை கவனித்து வந்த பிர்ஸா முண்டா, 1885களில் நடந்த சர்தார் மக்களின் போராட்டம் குறித்தும் தெரிந்து கொண்டார். அந்த மக்கள் ஆங்கிலேயே அரசுக்கு எதிராக போராடியது இவருக்கு உத்வேகத்தை கொடுத்தது. இதன் பின்தான் இவர் தன் ஆதிவாசி மக்களுக்காக போராட வேண்டும் என்று முடிவெடுத்தார்.

ஜமீன்தாருக்கு எதிரான போராட்டம்
ஆனால் ஆதிவாசி மக்கள் ஆங்கிலேயர்களால் மட்டும் அடிமைப்பட்டு கிடக்கவில்லை. அங்கிருந்த 50 ஜமீன்தார்கள் ஆயிரத்திற்கும் அதிகமான ஆதிவாசி கிராமங்களை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர். போராட வேண்டும் என்றால் இவர்கள் எல்லோருக்கும் எதிராகத்தான் போராட வேண்டும் என்று முடிவெடுத்தார். ஆங்கிலேயர்கள், உயர் சாதியினர், ஜமீன்தார்கள் என்று பெரிய படைகளை எதிர்த்து எழுந்தார் அந்த சிறிய இளைஞன் பிர்ஸா முண்டா.

நிலமே அவரின் உரிமை
நிலமே எங்கள் உரிமை என்று காலாவில் வரும் பாடல் வரிதான் இவரின் அரசியல் கொள்கையும். ஆதிவாசி மக்கள் தங்கள் பூர்வீக நிலங்களை மீட்டு எடுக்க வேண்டும் என்றுதான் இவர் போராட தொடங்கினார். நிலப்பிரபுத்துவம், மக்கள் அடிமையாக இருப்பது என பல விஷயங்களுக்கு எதிராக தன் மக்களை திரட்டினார்.

வீர படை
எந்த அளவிற்கு திரட்டினார் என்றால், இவர் உருவாக்கிய கொரில்லா படையில் 1000க்கும் அதிகமான இளைஞர்கள் இருந்தனர். பாரம்பரிய ஆயுதங்களை தாங்கி இவர்கள் போராட தயாரானார்கள். இந்த படைக்கு ”உல்குலான்” படை என்று பெயர். இதை பெரும் கலகம் விளைவிக்கும் படை என்று கூறலாம். கொரில்லா தாக்குதல் முறையை இவர்கள் கடைபிடித்தனர்.

கொரில்லா தாக்குதல்
இவர்கள் தாக்காத அரசு அலுவலகங்கள் கிடையாது. ஆணவத்தில் எழும்பி நின்ற பல ஜமீன்தார் கோட்டைகளை இவர்கள் படை தகர்த்து இருக்கிறது. பல ஆங்கிலேயே போலீஸ் படைகளின் உயிர்களையும் பலி கேட்டு இருக்கிறது இந்த இளம் இளைஞர் படை.

போராட்டம் செய்தார்
இவர்கள் தாக்குதல் நடத்திய அதே சமயத்தில் அரசுக்கும் ஜமீன்தாருக்கும் எதிராக போராட்டமும் செய்தனர். 1894ல் தொடங்கி பல வருடம் இவர்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். ஓரான், முண்டாசு, காரியாஸ் என்று பல இனக்குழுக்களை இணைத்து போராட்டம் நடத்தினார் பிர்ஸா முண்டா.

மிகப்பெரிய தாக்குதல்
1987 ஆகஸ்ட் மாதம் இவரின் படை குந்தி பகுதியில் பெரிய தாக்குதல் நடத்தியது. 400 பேர் கொண்ட படை அங்கு நுழைந்த ஜமீன்தார் வீடுகளிலும், போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தியது, இது பெரிய போர் போல நடந்தது. இதில் அங்கிருந்து பிரிட்டிஷ் படைகளை வீழ்த்தி பிர்ஸா முண்டா ஓடவிட்டார். அதன்பின் அந்த வருடம் முழுவதும் இப்படி நடத்திய தாக்குதலில் எல்லாம் பிரிட்டிஷ் படை பின்வாங்கியது. இதன் பின் கைது செய்யப்பட்ட இவர் 2 வருடம் கழித்து விடுதலை செய்யப்பட்டார்.,

மதம் பற்றி
இவர் எந்த அளவிற்கு நில சீர்திருத்தம், விடுதலை மீது நம்பிக்கை கொண்டாரோ, அதேபோல் மத சீர்திருத்தம் பற்றியும் பேசினார். இவர் கிறிஸ்துவத்தை எதிர்த்தாலும் இந்து மதத்தை எங்கும் ஆதரிக்கவில்லை. இவர் தாய்மதத்திற்கு திரும்ப வேண்டும், இந்து, கிறிஸ்துவம் இல்லாமல் இயற்கையை வழிபடும் ஒற்றை இயற்கை கடவுள் கொண்ட ஆதிவாசி மதத்திற்கு திரும்ப வேண்டும் என்றார். மூட நம்பிக்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். மது குடிப்பதை, விலங்குகளை கடவுளுக்கு காணிக்கை அளிப்பதை எதிர்த்தார். மக்கள் மத்தியில் தலைவனாக மாறினார்.

மரணம் அடைந்தார்
இவர் செய்த புரட்சிகளை பொறுத்துக் கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள் இவரை 1900 மார்ச் மாதம் கைது செய்தனர். ராஞ்சி ஜெயிலில் இவர் அடைக்கப்பட்டார். அதன்பின் இவர் 1900 ஜூன் 9ம் தேதி மரணம் அடைந்தார். இவர் மரணத்தில் இப்போதும் மர்மம் நிலவுகிறது. ஆங்கிலேயே அரசு இவர் காலரா வந்து இறந்தார் என்றது, ஆனால் அவரின் படையினர் இவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என்கிறது. இதன் மர்மம் இன்னும் முடிவிற்கு வரவே இல்லை. இறந்த போது இவருக்கு 24 வயதுதான்.

கதைகள்
இவர் அம்மாநில நாட்டுப்புற கவிதைகளில்,கதைகளில், பாடல்களில் இன்னும் ஹீரோவாக வழிபட படுகிறார். இவருக்காக கோவில்களும் கூட உள்ளது. இவரே தன்னை கடவுளின் தூதுவன் என்று ஒருமுறை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிவாசி மக்களுக்கு இப்போது இவர்தான் தெய்வம்.

அரசு மரியாதை
இவரை அம்மாநில அரசு தூக்கி வைத்து கொண்டாடுகிறது. பிர்ஸா முண்டா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னலாஜி, பிர்ஸா முண்டா விவசாய பல்கலைக்கழகம், பிர்ஸா முண்டா ஸ்டேடியம், பிர்ஸா முண்டா விமான நிலையம், பிர்ஸா முண்டா ஜெயில் என்று நிறைய அரசு கட்டிடங்கள் இவர் பெயரில் திறக்கப்பட்டு இருக்கிறது. இத்தனை புகழ்கள் கொண்ட இவரின் வாழ்கை வரலாற்றைத்தான் பா.ரஞ்சித் படமாக எடுக்கிறார்.

Share It