விழுப்புரம் அருகே சூலத்தில் குத்தி வைக்கப்பட்ட 9 எலுமிச்சம் பழங்கள்.. ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம் போனதால் பரபரப்பு!

 விழுப்புரம் அருகே சூலத்தில் குத்தி வைக்கப்பட்ட 9 எலுமிச்சம் பழங்கள்.. ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம் போனதால் பரபரப்பு!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கோவிலில் வேலாயுதத்தில் குத்தி வைக்கப்பட்டிருந்த 9 எலுமிச்சம் பழங்களை பக்தர்கள் ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம் எடுத்துச் சென்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவில் உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் தான் இந்த எலுமிச்சை ஏலம் நடந்துள்ளது. மொத்தம் 9 எலுமிச்சை பழங்கள் ரூ.1,55,000 க்கு ஏலம் போயுள்ளன.

அங்குள்ள பிரபலமான கோவில் ரத்தினவேல் முருகன் கோவில். இங்குள்ள கருவறையில் கடந்த 11 நாட்களாக வேலாயுதத்தில் குத்தி வைக்கப்பட்டிருந்த 9 எலுமிச்சை பழங்கள் நேற்றிரவு ஏலம் விடப்பட்டன. முருகன் கோவில் கருவறையில் குத்தி வைக்கப்பட்டிருந்த எலுமிச்சை என்பதால் பக்தர்களிடையே பெரும் பரவசம் ஏற்பட்டது. போட்டி போட்டு கொண்டு ஏலத்தில் பங்கேற்ற பக்தர்கள் எலுமுச்சை பழங்களை ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கொடுத்து வாங்கிச்சென்றனர்.

தீராத நோய்களுக்கு தீர்வு கிடைக்கும் என்பதாலும், குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்தப் பழச்சாறு அருந்தினால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கையாலும் எலுமிச்சைப்பழங்களை எத்தனை லட்சங்கள் கொடுத்தாவது வாங்கிச்செல்ல கடும் போட்டி ஏற்படுவதாக அந்த ஊர் மக்கள் கூறினார்கள்.

இப்படித்தான் ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த விளக்கேத்தி அருகே பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரன் கோவிலில் சமீபத்தில் எலுமிச்சம் பழம் அதிக விலைக்கு ஏலம் போனது. அங்கு மகா சிவராத்திரி தினத்தன்று. பூஜையில் சாமியின் பாதத்தில் ஒரே ஒரு எலுமிச்சைப் பழம் ஏலம் விடப்பட்டது. ரூ.2 ஆயிரம் என்று ஆரம்பித்தது ஏலம். பிறகு ஒவ்வொருவராக போட்டி போட்டு விலையை உயர்த்தி கொண்டே போனார்கள். மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த ஏலத்தை கண்டு களித்துகொண்டிருந்தனர். 2 ஆயிரத்தில் ஆரம்பித்த ஏலம் கடைசியாக 30 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது நினைவிருக்கலாம்.

Share It